Sunday, 9 June 2013

பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை.!



யுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை உச்சரிப்பதற்கு முன் நாடி சுத்தி செய்து கொண்டு, மந்திரங்களை மூச்சுப் பயிற்சியோடு கலந்து அதிகாலையும், மாலை வேளைகளிலும் உச்சரித்து பிராண சக்தியை அதிகப்படுத்திக் கொண்டார்கள் நம் முன்னோர்களான ரிஷிகளும், சித்தர்களும். இன்று விஞ்ஞானம் மனித உடற் கூறுகளைப்பற்றி ஆராயும் போது, அதில் பிராண சக்தியே எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இயங்குவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதையே ஆக்சிஜன் என்ற விஞ்ஞானப் பெயரால் வழங்குகிறார்கள். 

இப்போது நாம் மணற்பரப்புகளாக காண்பவை எல்லாம் யுகங்களுக்கு முன்பு மலைகளாகவும் காடுகளாகவும் இருந்தவையே. இயற்கையின் சீற்றங்களாலும், நீரின் அடித்துச் செல்லும் வேகத்தாலும், காற்றாலும், தாவரங்களின் வேர்களாலும் உடைக்கப்பட்டு தூளாகிய பாறைத் துகள்களே இந்த மண். இவையெல்லாம் கோடிக்கணக்காண ஆண்டுகளாக நடந்த மாற்றம். இன்னும் பூமியுள்ள காலம் வரையும் நடக்கும். அப்படி ஒரு காலத்தில் மலைப் பாங்கான பகுதி அதிகமாக இருந்த போது, அங்கு வாழ்ந்து வந்த ரிஷிகள் முனிவர்கள், சித்தர்கள் அங்கு காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால், குறைந்த காற்றில் இருந்து நிறைய பிராண சக்தியைப் (ஆக்சிஜனை) பெற கண்டுபிடித்த பயிற்சியே பிராணாயாமம். 

மேலும் பிராணாயாமம் மூலம் உடல் திசுக்களில் எல்லாம் ஆக்சிஜனாகிய பிராண சக்தியை நிரப்பி, மனதினால் அந்த ஆக்சிஜனை குண்டலினி என்கிற சேமிக்கப்பட்ட பிராண சக்தியோடு கலந்து தவ சக்தி மூலம் அதை ஓஜஸாக்கி, சுழுமுனை நாடியைத் திறந்து, அது வழியாக மேலேற்றி மூளைப் பகுதியில் உற்பத்தியாகும் தேஜஸ் என்கிற சுரப்பியோடு கலந்து அழியா தேகமும் ஆன்மிக ஞானமும் பெற்றார்கள். ஆன்மிக வாழ்வாகட்டும், இல்லற வாழ்வாகட்டும் விந்துவானது பிராண சக்தி அதிகமாகக் கொண்டு விளங்க வேண்டும். அதற்கு பிராணாயாமம் மிகவும் பயன்படும். முக்கியமாக, குழந்தை பாக்கியத் தடையில் உயிரணுக்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி ஒரு வரப்பிரசாதம். பெண்களுக்கு ஏற்படும் குழந்தை பாக்கியத்தடை சிக்கலில் இந்தப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் பெரும்பாலான தடைகள் நீங்கும். 

மேலும் ஒரு இரகசியம் என்ன வென்றால் உடலில் காரத் தன்மையையும், அமிலத் தன்மையையும் தீர்மானிப்பது ஆக்சிஜனே. இந்த இரு தன்மைகளே ஆண் குழந்தையா, பெண் குழழ்தையா என்பதையும் முடிவு செய்கின்றன. பெண்களுக்கு குழந்தை பாக்கியத் தடை ஏற்படும் காரணங்களைப் பற்றி பார்த்தால், 

1. பாதிக்கட்ட பெண்ணின் பாலுறுப்புகளில் இருந்து தகவல் மூளைக்கு செல்வதில்லை. 

2. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறுப்புகளின் செல்பாட்டிற்கான கட்டளைகள் மூளையில் இருந்து வருவதில்லை. 

3. பெண்ணின் உறுப்புகளில் உள்ள திசுக்களுக்கு தேவையான புரத உற்பத்திக்கான நொதிகள் நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரியிலிருந்தும், அட்சினல் சுரப்பியிலிருந்தும், கருவகங்களில் இருந்தும் சுரக்காதது அல்லது அதற்கான கட்டளை மூளையிலிருந்து வராதது. 

4. சரியான உணவுப் பழக்கம் இல்லாதது. 

5. ஆக்சிஜன் பற்றாக் குறை. 

6. பாலின உறுப்புகளில் இருந்து கழிவுகள் நீங்காமல் இருப்பது. 

இந்தக் காரணங்களால் கருமுட்டை உற்பத்தி ஆகாமல் போவது, கொழுப்பு திரண்டிருப்பது, கருப்பை மூடியிருப்பது, மாதத் தீட்டு ஏற்படாமல் இருப்பது போன்ற குறைகள் ஏற்படும். இதில் பிராணாயாமம் எப்படி இந்த பிரச்சனையை சீர் செய்யும் என்றால், இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் திசுக்களுக்கு கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுகிறது. பெண்களின் பாலுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் படிக்கு நரம்புகளின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன(தகவல், கட்டளை ஒருங்கிணைப்பு). திசுக்களின் கடினத் தன்மை போய் மென்மை அடைகிறது. இ,த்த பிளாஸ்மா பெண்களின் பாலுறுப்புகளுக்கு எளிதாகச் செல்கிறது. 

இரத்தத்தில் ஆக்சிஜன் அடர்வு அதிகரிப்பும், திசுக்களில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பும் ஏற்பட்டு, பரிமாற்ற வேகம் அதிகரிக்கிறது. இதனால் பெண்ணின் உறுப்புகளின் செயல்பாடுகள் மிகுந்திடுகின்றன. இதோடு கூட சலபாசனம், தனுராசனம்,பஸ்சிமோத்தாசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், சிரசாசனம். யோகமுத்ரா, பத்மாசனம், உட்டியாணம், நௌலி, சவாசனம் போன்ற ஆசனங்களையும் கற்று செய்து வந்தால் மிக விரைவில் பலன் கிடைப்பதோடு, அறிவான ஆரோக்யமான பிள்ளைகள் பிறக்கும் என்பது உறுதி. ஆண்களும் குழந்தை பாக்யத் தடை நீங்க இந்த ஆசனங்களையும், பிராணாயாமம் பயிற்சியையும் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். தனுராசனமும், யோக முத்ராவும் ஆண்கள் செய்ய வேண்டியதில்லை. அர்த்த மத்ஸ்யேந் திராசனம் செய்வது நல்லது. பிராணாயாமம் செய்யும் போது உட்டியாணா ஜாலந்திர மூலபந்தங்களுடன் கும்பகம் செய்ய வேண்டும். இதனால் ஆண் இனப்பெருக்க மண்டலங்களுக்கு இரத்த நாளங்கள் அதிகமாக இரத்தத்தை அளிக்கும். 

ஆக்சிஜன் குறைபாடு உள்ளவர்களுக்கு உடலில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். அமிலத்தன்மை அதிகம் உள்ளவர்களுக்கு பெண்குழந்தைகள் பிறக்கும். ஆக்சிஜன் அதிக அளவு பெறுகிற உடல் அமைப்பு பழக்க வழக்க முள்ளவர்களுக்கு காரத்தன்மை அதிகமான உடல் அமைப்பு இருக்கும். இவர்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். மலைப் பிரதேசங்களில் ஆண்குழந்தைகளைவிட பெண்குழந்தைகள் அதிகம் பிறப்பதன் காரணம் இதுதான். ஆக்சிஜன் நம் உடலில் வெப்பக் கட்டுப்பாட்டுக் காரணியாகத் திகழ்கிறது. புரதங்களை உற்பத்தி செய்கிறது. வளர்சிதை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இதயத்தின் இடது ஆரிக்கிள், இடது வெட்ரிக்கிள் அறைகளில் ஆக்சிஜன் செல்லும் போது மின் சக்தியை இரத்தத்திற்கு அளிக்கிறது. இந்த மின் சக்தி நம் உடல் முழுவதும் பரவயிருக்கிறது.

அஷ்டகர்ம சித்தி - தேரையர்



தேரையர் தனது சிவபூசாவிதியில் அஷ்டகர்மம் சித்தியாக அதற்குரிய மந்திரங்களை அருளியுள்ளார்.

தன்மையுடன் நமசிவய தம்பனந்தான்
தானான யவசிமந வசியமாகும்
மின்னின்ற சிவயநம உச்சாடந்தான்
முயங்கி நீ வசியநம அழைப்பதாகும்
ஒன்றான நயவசிம மோகனந்தான்
உருவுவய நமசியும் வித்துவேடமாமே

வேடமெனும் மநயவசி பேதனந்தான்
வினையமுடன் மசிவயந மாரணந்தான்
நாடவே அட்டகர்மம் ஆடுதற்கு
நலமாக இவ்வெழுத்தைத் தியானஞ்செய்யத்
தேடவே மூன்றெழுத்தைக்கூட்டி ஓதத்
திடமாக எட்டெட்டும் சித்தியாகும்
சூடவே கருமம் ஓன்றுக் கொருலட்சந்தான்
தீரமுடன் செய்திடவே சித்தியுண்டே.

தேரையர் சிவபூசாவிதி

பொருள்:

நமசிவய - தம்பனம்
யவசிமந - வசியம்
சிவயநம - உச்சாடணம்
வசியநம - ஆக்ருஷ்ணம்
நயவசிம - மோகனம்
வயநமசி - வித்துவேஷ்ணம்
மநயவசி - பேதனம்
மசிவயந - மாரணம்

அஷ்ட கர்மங்கள் சித்தியாக வேண்டுமென்றால் ஒவ்வொருகர்மத்திற்கும் கூறிய மந்திரத்தையும் ஐயும் கிலியும் சவ்வும் என்ற மந்திரத்தோடு சேர்த்து ஒரு கர்மத்திற்கு ஒரு லட்சம் உரு வீதம் தியானிக்க அக்கர்மங்கள் சித்தியாகும் என்கிறார் தேரையர்.

சித்தர்களை தெரிந்துகொள்வோம்..!



தமிழ்ச்சித்தர்களின் பெருமை, தமிழின் பெருமை!

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..”

என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம்.

சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது. முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மொழி இல்லாமல் எது நிலைக்கும்? தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள். ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது.

மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும். மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது. முக்காலத்தையும் அறிந்த சித்தர்களுக்கு முத்தமிழின் பெருமை தெரியாமலா போய்விடும்!

தமிழைப் பாடுவதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான் என்று புளங்காகிதம் அடைந்திருக்கும் திருமூலர் தமிழின் பெருமையும் இறைவனின் அருமையும் இரண்டறக் கலந்திருப்பது குறித்து மனம் குழைந்து கூறி இருப்பதைக் கவனியுங்கள்...

“முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே”
(திருமந்திரம்)அதனால்தான்
“அருமலர் மொழியுஞான அமுதர்த
செந்தமிழைச் சொல்வாம்”

என்கின்றார் ஞானவெட்டியான்.

ஆம்... தமிழை அவர் வெறும் மொழியாக மட்டும் பார்க்கவில்லை. ஞானாமிர்தமாகப் பார்க்கிறார்.
அதுமட்டுமல்ல.. சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது,

“பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து
தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரே”

என்றும் பாராட்டுகின்றார். தங்களின் தொன்மமான பெருமைகளில் தோய்ந்தது மட்டுமல்லாமல், தமிழையும் உணர்ந்ததாலேயே சித்தர்கள் சிறப்புப் பெற்றார்கள் என்கிறார்.

“பொதிகை மேவு மகத்தீர ராலெனது
போதத் தமிழ் வாக்கியம்”

என கேட்பவரை கிறுகிறுக்க வைக்கும் தன்தமிழ் ஆற்றல், பொதிகையில் வாழும் அகத்தியன் தந்த கொடை என்று போற்றுகிறார்.

அகத்தியர் தமிழைப் பற்றி என்ன சொல்லுகிறார்?
“சிந்தையுறு ஞானத் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே - செந்தமிழ்
நூல் காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும்
தேவியென்னும் பூரணியே சீர்”
(அகத்தியர் ஞானம் 100)

என்று தமிழை பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே சித்தரிக்கின்றார்.

பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும், தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார்.

“முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்
இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் -கடைச்
சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்”

இப்படி மூலிகையைச் சொன்னாலும், முக்தி பற்றிச் சொன்னாலும், முத்தமிழில் குழைத்தே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

சித்தர்கள் சித்தத் தெளிவு மட்டுமல்ல, செந்தமிழ்த் தெளிவும் கொண்டவர்கள் என்பதை இனியேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கற்ப மூலிகை சருமத்தைக் காக்கும் குப்பைமேனி..


மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.

மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று.

குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.

குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை.

மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு.

Tamil - Kuppaimeni

English - Indian acalypha

Telugu - Kuppi-Chettu

Malayalam - Kuppa-meni

Sanskrit - Arittamajarie

Botanical name - Acalypha indica

இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்

தேரையர் குணபாடம்

பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்க

குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

சொறி, சிரங்கு நீங்க

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்
யிலயட்டியிலை மேனியை யா

அகத்தியர் குணவாகடம்

பொருள் - குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.

குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.

மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.

குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.

குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.

துளசி தீர்த்தம்...



இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது.

மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் தேவாலயங்களில் துளசிகலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக விநியோகிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

துளசி எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட காலநிலைகளிலும் வளரக் கூடியதாகும். துளசி அதிகமாக வளரும் பகுதிகளில் உள்ள சயனைட் போன்ற விசவாயுக்களை உள்ளெடுத்து கூடுதலான ஒட்சிசன் நிறைந்த வாயுவை வெளியிடும். இது மனிதர்கள் சுவாசத்திற்கு சிறந்த புத்துணர்ச்சி தரும். அத்துடன் நுளம்புகள் துளசிச்செடி உள்ள சுற்றாடலில் காணப்படுவதில்லை.

துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

துளசி ஊறப் போட்ட தூய நீரை உட்கொண்டு வந்தால் இருதய நோய்கள் குணமாவதுடன் இருதயமும் வலிமை பெறும். கோவில்களில் துளசி கலந்த புனித நீர் தீர்த்தமாக விநியோகிப்பதை நாம் அறிவோம்.

ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த துளசி செடியை வணங்கிவந்தால் இவர்களை வணங்கியதற்க்கு சமனாகும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

துளசியின் தாவர வியற் பெயர் Ocimum sanctum இது Labiatae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது.

கோபுர தரிசனத்தின் மாண்பும் மகத்துவமும்....


"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.

கோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இனையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.

சிற்ப சாஸ்திரத்தின் படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை "ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்" என்பர்.

இதனையே திருமூலரும்...

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே"

என்று கூறுகிறார்.

எளிமையாய் விளக்குவதானால்

பாதங்கள் - முன்கோபுரம்
முழங்கால் - ஆஸ்தான மண்டபம்
துடை - நிருத்த மண்டபம்.
தொப்புள் - பலி பீடம்
மார்பு - மகாமண்டபம் ( நடராஜர்)
கழுத்து - அர்த்த மண்டபம் (நந்தி)
சிரம் - கர்ப்பகிரகம்
வலது செவி - தக்ஷிணா மூர்த்தி
இடது செவி - சண்டேஸ்வரர்.
வாய் - ஸ்நபன மண்டப வாசல்
மூக்கு - ஸ்நபன மண்டபம்
புருவ மத்தி - லிங்கம்.
தலை உச்சி - விமானம்.

"தேஹா தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸனாதன:
த்யஜோத்: அஞ்ஞான நிர்மால்யம் ஷோகம் பாவேன பூஜயேத்" என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம்.

108 சித்தர்களின் பெயர்கள்

1. திருமூலர்.
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள் (பெண் சித்தர்)
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா (பெண் சித்தர்)
108. பரமாச்சாரியார்.

(மலை வாழ் வாழ்கை - புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது )